வேதாகமம் உருவான கதை - பாகம் 5






ஜான் ஹியூஸ் எரிக்கப்பட்டது போலவே வேதாகமத்தை பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க முயன்ற மேலும் பலர் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரபல எழுத்தாளர் John Foxe என்பவர் வேதாகமத்திற்காக இரத்த சாட்சிகளாக மரித்தவர்களை பற்றி Acts and Monuments என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி முதல் பதிப்பை மார்ச் மாதம் 20 ஆம் தேதி 1563 ஆம் ஆண்டு  வெளியிட்டார். அவர் இந்த புத்தகத்தில் கி.பி 1517 ஆம் ஆண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் ஜெபிக்க கற்று கொடுத்த காரணத்தால் ஏழு பேர் மரத்தில் கட்டிவைத்து தீ வைத்து எரிக்கப்பட்டதாக பதிவு செய்து இருக்கிறார். John Foxe எழுதிய மிகவும் பிரபலமான இந்த புத்தகமானது தற்போது Foxe's Book of Martyrs என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கி.பி 1445 க்கும் 1455 க்கும் இடைபட்ட காலத்தில் Johann Gutenberg (ஜொஹானேஸ் குட்டன்பேர்க்)  என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டறிந்தார். அதன் பிறகு கி.பி 1456 ஆம் ஆண்டு வேதாகமம் லத்தின் மொழியில் அச்சிடப்பட்டது. ஒரு பக்கத்திற்கு 46 வரிகளை கொண்ட இந்த வேதாகமம் இவர்மூலம் அச்சேறப்பெற்றதால் இன்றும் "குட்டன்பேர்க் வேதாகமம்" (Gutenberg Bible) என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே முதன் முறையாக அச்சிடப்பட்ட புத்தகம் இந்த வேதாகமம் தான். 

கி.பி 1490 ஆம் ஆண்டு பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் 7 வது மற்றும் 8வது பேரரசர் ஹென்றியிடம் மருத்துவராகவும் இருந்த Thomas Linacre என்பவர் கிரேக்க மொழியை கற்றார். அதன் பிறகு மூல மொழியாகிய கிரேக்க மொழி சுவிசேசங்களுடன் புனித ஜெரோம் எழுதிய லத்தின் மொழி வேதாகம்மாகிய லத்தின் வல்கேட்டை ஒப்பிட்டு பார்த்தபின் அவரது டைரியில் எழுதி வைத்த வரிகள் “கிரேக்க மொழி சுவிசேசங்கள் எதுவும் உண்மையாக இருக்க முடியாது அல்லது அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க இயலாது.” கிரேக்கத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதால் லத்தின் மொழி வேதாகமம் அதிக முறண்பாடுகளுடன் காணப்படுகிறது. இங்கே மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் அதுநாள் வரைக்கும் முறண்பாடுகளுடன் கூடிய இந்த லத்தின் வல்கேட் வேதாகமத்தை யாராவது பிற மொழிகளுக்கு மொழி பெயர்த்துவிட்டு உயிரோடு இருந்ததாக சரித்திரத்தில் குறிப்பிடபடவில்லை.

அதன் பிறகு கி.பி 1496 ஆம் ஆண்டு கிரேக்க மொழியை கற்று தேரிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் John Colet தனது மாணவர்களுக்கு வேதாகமத்தை ஆங்கிலத்தில் போதித்தார் பிறகு லண்டனில் உள்ள உலக புகழ் பெற்ற பேராலயமான புனித பால் கதிட்ரலில் (St.Paul’s Cathedral)  போதிக்க துவங்கினார். இவரது பேருறையை கேட்பதற்காக பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களிம் ஆர்வத்துடன் அங்கு துவங்கினர். அதுவரைக்கும் ஏதோ புரியாத லத்தின் மொழியில் பாதிரியார் வேதம் வாசிக்க உட்கார்ந்து கேட்டுவிட்டு எதுவும் விளங்காமல் வீடு திரும்பிய மக்களுக்கு John Colet -ன் ஆங்கில பேருரை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. கத்தொலிக்க பேராயர்கள் இவரை மட்டும் விட்டு விடுவார்களா என்ன? இவருக்கும் பல எதிர்ப்புகள் வந்தது. John Colet சாதாரண ஆள் இல்லை. லண்டன் மாநகர மேயரின் மகன். அது மட்டுமல்லாமல் அங்கே இருந்த பெருந்தலைகள் பலருடன் இவர் நெருக்கமாக இருந்ததால்  இவரை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

Thomas Linacre மற்றும் John Colet ன் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொண்ட சிறந்த பண்டிதராகிய Erasmus முரண்பாடுகளுடன் கூடிய லத்தீன் வல்கேட் வேதாகமத்தை திருத்துவதற்காக அச்சு பொறியாளர் John Froben என்பவரின் உதவியுடன் கி.பி 1516 -ல் கிரேக்கம் மற்றும் அதன் லத்தீன் மொழிபெயர்ப்பு இரண்டும் அடங்கிய புதிய ஏற்பாட்டை Erasmus உருவாக்கி அச்சிட்டாரே தவிர வெளியிடவில்லை. அவர் அதை கி.பி 1522 ல் தான் வெளியிட்டார்.  ‘

இந்த புதிய ஏற்பாடானது கிரேக்க மூல பிரதிகளில் இருந்து நேரடியாக லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டதால் லத்தீன் வல்கேட்டில் இருந்த எல்லா குறைபாடுகளும் நீக்கப்பட்டு ஒரு சரியான வேதாகமமாக திகழ்ந்தது. இதனை உணர்ந்த பத்தாவது ரோம பாப்பரசர் லியோ அது நாள் வரை இருந்து வந்த வேதாகமத்தை ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது சட்டத்திற்கு எதிரானது என்ற தவறான கோட்பாட்டை கை விட்டார். கிரேக்கம் மற்றும் லத்தீன் இரண்டும் அடங்கிய புதிய ஏற்பாடு அந்த வருடமே அச்சிடப்பட்டது.

இராணுவ அதிகாரியாகவும் சிறந்த ஆன்மீக தலைவராகவும் இருந்தவர் William Tyndale. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் எம்.ஏ படித்தவர் இவர். எட்டு மொழிகளில் வல்லுநராகவும் விளங்கினார். கி.பி 1524 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்த போது  முதன் முதலில் புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டார் ஆனால் எதிர்ப்புகள் அதிகம் இருந்ததால் அடுத்த ஆண்டு கி.பி 1525 ஆம் ஆண்டு அதை வெளியிட்டார். இங்கிலாந்து அரசால் அந்த புதிய ஏற்பாட்டின் மொத்த பிரதிகளும் லண்டனில் உள்ள St Paul's Cross தேவாலயத்தில் வைத்து எரிக்கப்பட்டது.

ஆனாலும் துளியும் அச்சமில்லாத வில்லியம் டென்டல் (William Tyndale)  கி.பி. 1530 ஆம் ஆண்டு பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து பகுதிகளையும் தனித்தனி தலைப்புகளில் ஐந்து புத்தகங்களாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரால் மொழி பெயர்க்கதான் முடிந்ததே தவிர வெளியிட முடியவில்லை. கி.பி. 1535 ஆம் ஆண்டு சிறை பிடிக்கப்பட்டு கி.பி 1536 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி இங்கிலாந்து அரசால் கட்டிவைத்து எரித்து கொல்லப்பட்டார். என் தேவனே இங்கிலாந்து மன்னனின் கண்களை திறந்தருளும். இது தான் அவர் கடைசியாய் கடவுளிடம் மன்றாடியது. இவரது மன்றாடிற்க்கு அடுத்த ஆண்டே  விடை கிடைத்தது. ஆனால் அதனை கண்டு மகிழ அவர்தான் உயிரோடு இல்லை. பிற்காலத்தில் வெளிவந்த பிரபல கிங் ஜேம்ஸ் வெளியீட்டில் 83 % வில்லியம் டென்டலின் புதிய ஏற்பாட்டையும் 76 % இவரது பழைய ஏறபாட்டையும் ஒத்து காணப்படுகிறது. 


மார்டின் லூதர் பற்றி நாம் முன்பே கொஞ்சம் பார்தோம் அல்லவா, இப்போது மேலும் பார்போம். பாப்பரசர்கள் சொல்வதே வேதவாக்காக இருந்த அந்த காலகட்டத்தில் முதன்முதலாக பாப்பரசர்களையும் அவர்களின் மூட போதனைகளையும் எதிர்த்து குறல் கொடுத்தவர் இவர். கத்தொலிக்க திருச்சபையின் 95 தவறுகளை (95 Theses) பட்டியலிட்டு கி.பி 1517 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இரவு விட்டன்பர்க் நகரின் தேவாலய கதவின் மீது தொங்கவிட்டது தான் அவர் இட்ட பிள்ளையார் சுழி. குற்றசாட்டுகளை கதவில் ஆணியடித்து தொங்கவிட்ட அன்றய தினமே அந்த 95 குற்றசாட்டுகளையும் தன் கைப்பட ஒரு காகிதத்தில் எழுதி கத்தொலிக்க திருச்சபையின் Brandenburg நகர பேராயர்களான Albert of Mainz மற்றும் Magdeburg ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். அந்த குற்றச்சாட்டுகளை பற்றிய செய்தி இரண்டு வாரத்திற்குள் ஜெர்மனி முழுவதும் பரவியது. இரண்டே மாதத்திற்குள் ஐரோப்பா முழுவதும் பரவியது. மார்டின் லூதரின் நெருங்கிய நண்பரான Christoph von Scheurl என்பவரும் மேலும் சில நண்பர்களும் சேர்ந்து கி.பி 1518 ஆம் ஆண்டு மார்டின் லூத்தர் வெளியிட்ட 95 குற்றசாட்டுகளையும் லத்தின் மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழி பெயர்த்து வெளியிட்டனர். 

அதுமட்டுமல்ல  கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகள் மற்றும் சமயக் கோட்பாடுகளில் நிகழ்ந்த திரிபுகள் மற்றும் திணிப்புகளை உலகுக்கு வெளிக்கொணரவும் அதிலும் முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால் பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கத்தையும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கத்தையும் (சீமோனி)  விட்டு கிறிஸ்தவத்தை மீட்டெடுக்க கி.பி 1517 ஆம் ஆண்டு கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) என்னும் இயக்கத்தை துவங்கினார். இவரது இந்த செயல் 1500 ஆண்டுகளாய் யாராலும் அசைக்க முடியாத கத்தொலிக்க திருச்சபையின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது.  Erasmus Bible வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டு கி.பி 1523 ல் மார்டின் லூதர் ஜெர்மன் மொழியில் German Pentateuch என்ற பெயரில் (அதாவது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்கள் ஆதியாகமம் முதல் உபாகமம் வரை) மொழி பெயர்த்து வெளியிட்டார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கி.பி 1529 ல் ஜெர்மானிய புதிய ஏற்பாட்டை (German New Testament) வெளியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1530 ல் முழு வேதாகமத்தையும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். லூதர் இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி அமைத்தார். "மட்டும்" என்னும் சொல்லை "நம்பிக்கை" என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28 ஐ "நம்பிக்கையின் வாயிலாக மட்டுமே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்" என மொழிபெயர்த்தார். மேலும் 14 அப்போகரிபாக்களும் முதன்முறையாக இவரது வேதாகமத்தில் தான் முழுவதுமாக நீக்கப்பட்டது” என்பது இங்கே குறிப்படப்பட வேண்டிய செய்தி.

                  வேதாகமம் உருவான கதை பாகம் 6

                                    விரைவில்...

No comments:

Post a Comment