வேதாகமம் உருவான கதை - பாகம் 2





இந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது? எந்த காலத்தில் எழுதப்பட்டது? எழுதியது யார்? ஆயிரம் ஆண்டுகள் பழமையான புத்தகம் நம் தமிழ் மொழியிலும் உண்டு, ஆனால் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான புத்தகம் எந்த மொழியிலாவது உண்டா? இருக்கலாம் தவறில்லை. ஆனால் உலகத்தில் எந்த புத்தகத்திற்கும் இல்லாத மற்றொரு சிறப்பும் இந்த புத்தகத்திற்கு உண்டு. இந்த புத்தகம் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுத துவங்கப்பட்டது. சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி முடிக்கப்பட்டது. எழுத துவங்கியவர் ஒருவர், முடித்தவர் மற்றொருவர், தொகுத்தவர் வேறொருவர். எழுத துவங்கியது எபிரேயு (Hebrew) மொழியில், இடையில் பாதி அராமக் (Aramaic) மொழியில், முடிவுரை எழுதி முற்று புள்ளி வைத்தது கிரேக்க (Greek) மொழியில். என்ன உங்களால் நம்ப முடியவில்லையா? விளக்கம் அளிக்கிறேன். இரண்டு வரிகளில் சொல்லிவிட இது என்ன திருக்குறளா? வேதாகமம் அல்லவா?

வேதாகமத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் உண்டு. ஒன்று பழைய ஏற்பாடு (Old Testament). கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி இது கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த தீர்க்க தரிசிகளால் எழுதப்பட்டது. இந்த பழைய ஏற்பாடானது பல வேதங்களின் தொகுப்பு ஆகும். உதாரணமாக இந்த பழைய ஏற்பாட்டில் 39 முதல் 45 ஆகமங்கள் உள்ளன. இதில் முதல் ஐந்து ஆகமங்கள் மோசே தீர்க்கதரிசிக்கு வழங்கப்பட்டது. 6 வது ஆகமம் யோசுவா தீர்க்கதரிசிக்கு வழங்கப்பட்டது. முதலாம் சாமுவேல், இரண்டாம் சாமுவேல் இரண்டும் சாமுவேல் தீர்க்கதரிசிக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பல தீர்க்க தரிசிகளுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் தொகுப்பு பழைய ஏற்பாடு ஆகும்.  மற்றொன்று புதிய ஏற்பாடு (New Testament). இது கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்னர் வாழ்ந்த பலர் எழுதிய புத்தகங்களின் தொகுப்பு ஆகும். சுருக்கமாக சொன்னால் பழைய ஏற்பாடு கி.மு. புதிய ஏற்பாடு கி.பி. 
முதலில் பழைய ஏற்பாடு தோன்றிய வரலாற்றை காண்போம். சற்றே பின்னோக்கி பயணிப்போம். கி,மு 1450-1400 இந்த காலகட்டத்தில் தான் ஆதியாகமம், யாத்திரையாகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களும் மோயிசன் (Moses) என்பவரால் எபிரேயு (Hebrew) மொழியில் எழுதப்பட்டதாக உலகில் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இவரை மோசே என்று சுருக்கமாக அழைப்பார்கள். (மூசா நபி என்றால் இஸ்லாமியர்களுக்கும் தெரியும்) யூதர்களின் வேதமாகிய தோரா (Thorah) என்பது இந்த ஐந்து ஆகமங்கள் தான்.

இந்த ஐந்து ஆகமங்களும் முழுமையாக மோயிசனால் எழுதப்படவில்லை. ஒரு சில பகுதிகள் மட்டுமே மோயிசனால் எழுதப்பட்டவை என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார்  Richard Elliott Friedman என்ற ஆங்கிலேய எழுத்தாளர். இவர் எழுதிய "Who Wrote the Bible? என்ற புத்தகத்தை வாசித்தால் உங்களுக்கும் புரியும். இந்த புத்தகமானது இணைய தளத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த ஆகமங்கள் மோயிசனால் எழுதப்படவில்லை என்பதற்கு ஒரு சில ஆதாரங்களை இங்கே காணலாம்.
பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடு முடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,
தென்புறத்தையும், சோவார் வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.
அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விட்த்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.
மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட படியே செய்தார்கள்.
மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். (உபாகமம் 34:1-12)

மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றியும் அவரை அடக்கம் செய்த விவரமும் இறக்கும் போது அவரின் வயதும் மோசேயின் மரணத்திற்கு பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாள் துக்கம் கொண்டாடிய செய்தியும் மோசேவுக்கு பிறகு யோசுவா என்பவர் அடுத்த தலைவராக ஆகிய விவரமும் எப்படி இடம் பெற முடியும்?
இதில் மேலும் கவனிக்க வேண்டியது கடைசி வசனம் கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை அப்படி என்றால் இது மோயீசன் இறந்து பல ஆண்டுகளுக்கு பின் ஏதோ ஒரு தீர்க்கதரிசியால் எழுதப்பட்டு பிற்காலத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
கி.மு 586 -ல் எருசலேமானது நெபுஹத்நேசர் என்ற பாபிலோனிய மன்னரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. யூதர்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டனர். அப்போது அங்கே அராமக் (Aramaic) மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. கி.மு 555-545 க்கும் இடைபட்ட காலங்களில் தானியேல் ஆகமத்தின் சில பகுதிகள் அதாவது அதிகாரம் 2:4-7:8 வரை அராமக் மொழியில் எழுதப்பட்டது. அதன் பிறகு கி.மு 425 -ல் பழைய ஏற்பாட்டின் கடைசி பகுதியான மலாக்கி எபிரேயு மொழியில் எழுதப்பட்டது. பின்னர் கி.மு 400 -ல் எஸ்றா அதிகாரம் 4:8-6:18 வரை அராமக் மொழியில் எழுதப்பட்டது. மேலே சொல்லப்பட்ட அனைத்து குறிப்புகளும் வரலாற்றை ஆராய புகுந்தவர்களின் தோராயமான கணிப்புகளே தவிர உண்மை யாருக்கும் தெரியாமல் தான் இருந்தது கி.பி 1947 ஆம் ஆண்டு வரை. அதற்கு பின்னர் தான் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  


No comments:

Post a Comment